தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர்கள் அணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.வி. தினகரன் நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் ஒன்று அளித்திருந்தார். அவர் அளித்த அந்த புகார் மனுவில், “பா.ஜ.க. ஐ.டி.பிரிவின் தேசியத் தலைவராக அமித் மாளவியா இருக்கிறார். இவர், அவரது எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தள பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய காணொளியை பதிவிட்டு, சனாதனத்தை பின்பற்றும் பாரதத்தின் 80 சதவீதம் மக்களை இனப்படுகொலை செய்ய உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் என்று பொய்யான செய்தியை பதிவிட்டுள்ளார்.
அமித் மாளவியாவின் கருத்து சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டி மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நோக்கத்தில் உள்ளது. எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தது. அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், அமித் மாளவியா மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டும் என்றே செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.