ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (34). இவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் கடந்த வாரம் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னபள்ளம் சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த செல்வகுமார் அந்த வழியாக வந்தால் வாகனங்களைச் சோதனை செய்தார். அப்போது ஒரு சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம் பணம் கேட்டதாகவும், மேலும் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது தொடர்பாக எஸ்.பி. ஜவகர் விசாரணை நடத்தி காவலர் செல்வகுமாரை பணியிடை நீக்கம் செய்தார். இதனால் செல்வகுமார் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வகுமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் அவருடைய உறவினர்கள் அம்மாபேட்டை காவல் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் திடீரென ஒன்று திரண்டனர். பின்னர் பவானி - மேட்டூர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயர் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செல்வகுமாரை வேண்டுமென்றே வீடியோ எடுத்து பணியிடை நீக்கம் செய்து விட்டனர். மேலும் அவரை தாக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்து கொள்ள வைத்து விட்டனர். எனவே செல்வகுமாரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறினர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களிடம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்த துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து விசாரிக்கப்படும் என்ற உறுதியளித்தனர். இதனைக்கேட்டு இரவு 8 மணி அளவில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. கிட்டத்தட்ட மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை 6 மணி நேரம் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் செல்வகுமாரின் தந்தை பெருமாள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2-ந் தேதி அன்று இரவு சின்னப்பள்ளம் சோதனை சாவடியில் தனது மகன் செல்வகுமார் பணியில் இருந்தபோது இரவு சுமார் 8.45 மணியளவில் அந்த வழியாக வந்த மகேந்திரா என்ற வண்டியில் பிரபுதேவா என்ற ஓட்டுநர் வண்டியைச் சோதனை செய்ததில் ஓட்டுநருக்கும் தனது மகனுக்கும் தேவையில்லாத வாய்தகராறு ஏற்பட்டதாகவும், ஓட்டுநர் பிரபுதேவா அவரது உரிமையாளர் கார்த்திக்கு போன் செய்து தகவல் சொல்லியதாகவும் உடனே உரிமையாளர் கார்த்தி மாருதி 800 ஆல்டோ காரில் வேலுச்சாமி, விஜயகுமார், வெங்கடேஷ்வரன் ஆகிய நான்கு பேரும் சோதனை சாவடிக்கு வந்து தனது மகனிடம் பிரச்சினை செய்துள்ளனர். இங்கு எப்படி வேலை செய்வாய் எனவும், இங்கேயே கொன்று புதைத்து விடுவோம் எனவும் தன் மகனை மிரட்டியதாகவும், மேலும் பொய்யான வீடியோ எடுத்து அதை மேல் அதிகாரிக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
இந்நிலையில் தான் எனது மகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே என் மகன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இதனை அடுத்து அம்மாபேட்டை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று காவலர் செல்வகுமாரின் பிரேதப் பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் காவலர் மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.