இந்த ஆண்டுக்கான ஃபார்முலா 4 கார் பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 2வது சுற்று போட்டி நேற்று (31-08-24) சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. அதன்படி, ஃபார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தகுதி சுற்றுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த பந்தயத்தை காண ஏராளமான ரசிகர்களும், பிரபலங்களும் வந்தனர். சென்னையில் நடைபெற்ற கார் பந்தயம் நேற்று நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கார் பந்தயம் நடத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நீங்கள் கேள்வி கேட்பதில் இருந்தே இது அவசியம் இல்லை என்ற உங்களின் உணர்வு எனக்கு புரிகிறது. அவசியம் இல்லை, இது தேவையில்லை என்ற குரலை எடப்பாடி பழனிசாமி எழுப்பி இருந்தார். தமிழ்நாடு முழுக்க பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பி இருந்தனர். ஆனால் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக இந்த ஆட்சியின் சார்பில் இந்த ஃபார்முலா கார் ரேஸ் நடத்தப்பட்டது.
இதில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறைய வீடியோக்களை பார்த்தோம் அதில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட பாதிக்கப்பட்டு ரொம்ப நேரம் தவித்த அந்த காட்சிகளைப் பார்த்தோம். இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். இனிமேலாவது இந்த அரசு உணர்ந்து யாருக்கும் ஏற்புடையதாக இல்லாத, பயன்பாடு இல்லாத திட்டங்களை தவிர்த்து மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
போக்சோ சட்டம் வந்த பிறகும் தமிழகத்தில் பாலியல் தொல்லைகள் அதிகமாக இருக்கிறது. மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது. கள்ளச்சாராய விற்பனை அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. இதையெல்லாம் எதிர்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால் நிம்மதி வந்த பாடில்லை. 2026 ஆட்சி மாற்றம் தான் இதற்கு ஒரே தீர்வாக இருக்கும்'' என்றார்.