கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி மற்றும் உறவினர்கள் குடும்பத்தோடு விருத்தாச்சலம் அருகேயுள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் மொட்டை அடிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். பெரியநெசலூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென, இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் மாவட்டம் ஆரகலூர் கிராமத்தைச் சேர்ந்த குணப்பிரியன் என்பவர் இருசக்கர வாகனத்துடன் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிரே மீன் ஏற்றி வந்த லாரியும், காரும் எதிர்பாராவிதமாக, பலமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்துவந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே வேலுசாமி மனைவி ரேவதி மற்றும் அவருடைய மகள் பவானி, பரிமளா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் எதிரே வந்த மீன் லாரயின் கிளீனர் லோகநாதனும் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். மேலும் விபத்தில் சிக்கிய அறிவரசன், பிரித்திவி சாய், ரேணுகாதேவி, மணிமேகலை, டிரைவர் தேவா ஆகியோரை பலத்த காயத்துடன் வேப்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் பெரம்பலூர் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், காப்பாற்ற மனமில்லாமல், மீன் ஏற்றி வந்த லாரியில் சிதறிய மீன்களை பொதுமக்களில் சிலர் அள்ளிச் சென்றனர். மனிதாபிமானம் இல்லாத மக்களின் செயல் வேதனையளித்ததாக இருந்தது.