கள்ளக்குறிச்சி நகரில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர் பாண்டிச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை தனது மனைவி தீபாவுடன் புதுச்சேரி பதிவு எண் கொண்ட மாருதி சுசுகி காரில் புதுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார். காலை சுமார் பத்து முப்பது மணி அளவில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியே வந்துள்ளது.
இதைப் பார்த்த கோவிந்தராஜ், காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, தனது மனைவி குழந்தைகளை அவசர அவசரமாகக் காரிலிருந்து கீழே இறக்கியுள்ளார். அதற்குள் காரில் எஞ்சின் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது, அதைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி தீயை அணைத்தனர். மேற்படி கார் தீப்பிடித்து எரிந்த தகவலறிந்த விழுப்புரம் மேற்குக் காவல் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே இதே போன்று திடீரென்று ஒரு கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பானது. இதேபோல, தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது கார்கள் திடீர் திடீரென்று தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கான காரணங்கள் என்னவென்று சம்பந்தப்பட்ட கார் கம்பெனிகள் இதுவரை முழுமையாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.