நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இதனிடையே வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாளை(23.3.2024) மற்றும் நாளை மறுநாள்(24.4.2024) பொது விடுமுறை தினங்கள் என்பதால் இரு நாட்களுக்கு தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இயலாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
பொது விடுமுறை நாள்களில் வேட்பு மனுக்கள் பெற இயலாது என்ற விதியுள்ளது. அந்த வகையில் மார்ச் 23 ஆம் தேதி மாதத்தின் 2 ஆவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாளாகும். இந்த நாள்களில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைப் பெற முடியாது. அதன் பின்னர் 25 ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரையில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.