அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர் சங்கத் தேர்தலில் தமிழக முதல்வர் ஆசி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் படுதோல்வி அடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதே முடிவு தேர்தலிலும் பிரதிபலிக்குமா? என்று ஊழியர்கள் மத்தியில் பேசபட்டு வருகிறது.
அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க தேர்தல் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி கடந்த 20ம் தேதி நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். தேர்தலில் 1-ம் எண் அணி தற்போதைய தலைவர் மனோகரன் தலைமையிலும் 3ம் எண் அணி பாண்டியன் தலைமையிலும் போட்டியிட்டனர்.
இதில் மூன்றாம் அணி சார்பில் போட்டியிட்ட பாண்டியன் தலையிலான அணிக்கு உறுதுணையாக பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஊழியர் முருகையன் இருந்தார். இவர் மீது அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் போலிச்சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது உள்ளிட்ட சில குற்ற வழக்குகள் உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட இவர் அதிமுகவில் பொறுப்பை பெற்று மாவட்ட அமைச்சர், எம்எல்ஏக்களின் தொடர்பு வைத்துகொண்டு சாலைபோடுவது, பாலம் கட்டுவது போன்ற டெண்டர்களை எடுத்து வருகிறார்.
மனோகரன் முருகையன்
தேர்தலில் அனைத்து ஊழியர்களும் 3-ம் அணிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று தேர்லுக்கு முன் முருகையன் வேண்டுகோளின் பேரில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் தலைமையில் 3-ம் எண் அணியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற ஆசிபெற்றனர்.
முதல்வரிடம் எடுத்துகொண்ட புகைபடத்தை பல்கலைக்கழக அனைத்து ஊழியர்களுக்கும் சமூக வலைதளங்கள் மூலம் அனுப்பினார்கள். 3-ம் எண் அணிக்கு முதல்வர் ஆசி உள்ளது. ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று பல லட்சங்களை செலவு செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஊழியர்களிடம் வாக்கு கேட்டனர்.
இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே தேர்தல் நடந்தது. தேர்தலில் 5340 ஊழியர்களில் 4,431 வாக்களித்தனர். 83 சதவீத ஓட்டுகள் பதிவானது.
போட்டியில் 1ம் எண் அணியின் தற்போதைய தலைவர் மனோகரன் 2,257 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 3ம் எண் அணியில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாண்டியன் 2,012 ஓட்டுகளும் பெற்றனர்.
பொதுச் செயலர் பதவிக்கு 1ம் எண் அணி வேட்பாளர் பழனிவேல் 2,272 ஓட்டுகள், பொருளாளர் பதவிக்கு 1ம் எண் அணி தவச்செல்வன் 2,230 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் 1-,ம் அணி சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர். முதல்வரின் ஆசிபெற்று தேல்தலை சந்தித்த 3-ம் எண் அணியில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து 3-ம் அணியில் உள்ள பல்கலைக்கழக ஊழியர்களை கேட்டபோது, தேர்தலில் ஊழியர்களுக்கு உள்ள குறைகளை கூறி வாக்குசேகரித்தோம். அப்போது முருகையனை பற்றியும் அவர் மீதுள்ள வழக்கு பற்றி பல ஊழியர்கள் விவாதித்தார்கள். அது தேர்தலில் பிரதிபலித்துள்ளது. அவர் இல்லையென்றால் வெற்றி பெற்று இருப்போம். குறைந்த வாக்கில் தோல்வியடைந்துள்ளோம் என்கிறார்கள்.