வேட்பாளர்கள் விதவிதமாகச் சிந்தித்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், கரோனாவால் உயிரிழந்த தனது கணவரின் புகைப்படத்தைப் பிரச்சார வாகனத்தில் கட்டி நாகை தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தது, மக்கள் மத்தியில் சென்டிமென்டாகப் பேசவைத்துள்ளது.
நாகை சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிடுகிறார் மஞ்சுளா சந்திரமோகன். அவரது கணவர் சந்திரமோகன் கடந்த ஆண்டு கரோனா தொற்றால் உயிரிழந்தார். சந்திரமோகன் நாகை ஒன்றியத்தில் செல்வாக்குப் பெற்றவராகவும், அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்கு அறிமுகமானவராகவும் இருந்த நிலையில், கரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
இந்நிலையில், உள்ளூரில் செல்வாக்கு மிகுந்த நபரான சந்திரமோகனின் புகைப்படத்தைப் பிரச்சார வாகனத்தில் கட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அமமுக வேட்பாளரான மஞ்சுளா சந்திரமோகன். வாக்காளர்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையில் கோட்டைவாசல், அக்கரைகுளம், பெருமாள் கோவில் தெரு, நாலுகால் மண்டபம், வெளிப்பாளையம், பப்ளிக் ஆஃபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் இறந்த கணவரின் புகைப்படத்துடன், தனது மகனோடு அமமுக வேட்பாளர் மஞ்சுளா சந்திரமோகன் வாக்கு சேகரித்தார்.