தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் "தேர்தல் மன்னன்" என்று அழைக்கப்படுகின்ற பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தேர்தல் அரசியலை கவனிப்பவர்களுக்கு பத்மராஜன் என்ற இந்த பெயர் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கி கவுன்சிலர் தேர்தல் வரை எங்கே தேர்தல் நடைபெற்றாலும் அங்கே முதல் ஆளாகச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்வார். அந்த வகையில் இதுவரை அவர் 213 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது 214-வது முறையாக விரைவில் தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தலா மூன்று இடங்களில் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை இருந்துவரும் நிலையில், தற்போது இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அதில் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு கைகெயழுத்தும், 10,000 ரூபாய் டெபாசிட் தொகையும் கட்ட வேண்டும். அந்த வகையில் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று தெரிந்தும் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே பலமுறை வேட்புமனு தாக்கல் செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவே தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளார்.