புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி:
13,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில்13000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கோவையில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்ப்படுத்தும் விதமாக கடந்த நான்கு ஆண்டுகளாக கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேசன் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்தும் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று 5வது ஆண்டாக “கோயம்புத்தூர் மாரத்தான் 2017” நடைபெற்றது.
தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தின் ஆதரவோடு நடைபெறும் இந்த மாரத்தான் போட்டி கோவையின் பிரதான சாலை வழியாக 21கிலோமீட்டர்,10கிலோமீட்டர் மற்றும் 5கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் பெண்கள், மூத்த குடிமக்கள், மருத்துவர்கள், மாற்று திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பல்வேறு தனியார் தொண்டு நிறுவங்களை சேர்ந்தொர் என சுமார் 13000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் முதல் மூன்று இடம் பெறும் வீரர் மற்றும் வீரங்களைகளுக்கு ரூ.25000, ரூ.15000, மற்றும் ரூ.10000 முறையே வழங்கபடுகிறது. இதில் கலந்து கொண்ட வீரர்கள் கூறும்போது, இது போன்ற மாரத்தான் போட்டிகள் தங்களுக்கு மன வலிமையும், உடல் வலிமையையும் அளிப்பதாகவும் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் இதில் காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், அதிவேக விரைவு படையை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.