சேலம் டூ சென்னை இடையே காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் என 5 மாவட்டங்கள் வழியாக 250 கி.மீ தூரத்துக்கு புதியதாக 8 வழிச்சாலை அமைக்க பாஜக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. இதற்கு திமுக, பாமக, இடதுசாரிகள் உட்பட சில கட்சிகள், விவசாய சங்கங்கள் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அத்திட்டத்தை கைவிடாமல் செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் பலரது நிலங்களும் கையகப்படுத்தப்பட்டது. அதனை எதிர்த்து போராடிய மக்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதன்பின் இந்த திட்டத்தை செயல்படுத்துங்கள் எனச்சொல்லி பழைய அரசாணையை ரத்து செய்து, நிலங்களை ஒப்படைக்கச்சொல்லி உத்தரவிட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த விவகாரம் இப்போது மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் உயிர்த்தெழ முயற்சிக்கிறது.
சமீபத்தில் ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்காரி, தமிழக அரசிடம் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என அழுத்தம் தந்திருக்கிறார். அதேபோல், சமீபத்தில் தர்மபுரி டி.ஆர்.ஓ. ‘சுற்றுச்சூழல் அனுமதி பெற்று அரசு வழிகாட்டுதல்படி, நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கு’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரும்பட்டம் கிராமத்தில் எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் தலைமையில் இன்று (29 ஆம் தேதி) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டமன்ற தேர்தலின்போது, 8 வழிச்சாலை திட்டத்தின் அரசாணை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அந்த அறிக்கையை நினைவூட்டும் விதமாக 5 மாவட்டங்களில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.