அ.தி.மு.க. பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வரும் ஜூலை 6- ஆம் தேதி அன்று பட்டியலிடப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் கடந்த ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு அறிவித்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.
பொதுக்குழு, செயற்குழுவில் எடுக்கக் கூடிய முடிவுகள் என்பது அக்கட்சி சார்ந்த விவகாரம் என்றும், பெரும்பான்மையான உறுப்பினர்கள் சொல்லக்கூடிய விவகாரங்களைத்தான் கட்சி இறுதி முடிவாக எடுக்கும் எனவும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம், சட்டப்பூர்வமாக நடத்தப்பட்டதாகவும், அதில் நீதிமன்றம் தலையிடுவது அதிகாரத்தை மீறிய செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் சார்பிலும் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருப்பதால், உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தி விடுமுறைக் கால சிறப்பு அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது. அவசரமாக விசாரிக்க எதுவும் இல்லை என்றும், இந்த வழக்கு விசாரணையில் தங்களை கேட்காமல் உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நாளை மறுநாள் (06/07/2022) தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று விசாரணைக்கு வழக்கு பட்டியலிடப்படும் என அறிவித்தனர்.