தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறக்க அனுமதி வேண்டும் என்று அந்நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (27/04/2021) உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர், மத்திய அரசு வழக்கறிஞர், நிறுவனத்தின் வழக்கறிஞர், ஆலையால் பாதிக்கப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்த அமர்வு, ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க ஐந்து நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (28/04/2021) உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ஆம் தேதி வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான அனுமதி நீட்டிக்கப்படுமா என்பது அப்போதைய சூழலைப் பொறுத்து முடிவெடுக்கப்படும். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தேவையான மின்சாரம் உள்ளிட்டவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட குழு பட்டியலை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்டக் காவல்துறை எஸ்.பி., தூத்துக்குடி மாவட்ட தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.