ஈரோடு கிழக்கில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த அதிமுக நிர்வாகி மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரப் பணிகளுக்காக வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி கந்தன் ஈரோடு கிழக்கு அக்ரஹாரம் பகுதியில் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் கந்தன் மயங்கி விழுந்தார். இதையடுத்து அதிமுகவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். மாரடைப்பால் உயிரிழந்த கந்தன் அதிமுகவின் கடலூர் மாவட்ட ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.