Skip to main content

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்