முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (31.10.2023) மாலை 06.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாகத் தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது, அரசின் கொள்கை முடிவுகள் குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடுகள், புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் செயல்பாடு குறித்தும், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதா குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தைக் காரணமாக வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது நடைபெற இருக்கும் அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.