ஈரோடு ஜவுளி சந்தை தமிழக அளவில் பிரபலமானது. பன்னீர்செல்வம் பார்க் அருகே இந்த ஜவுளி சந்தை செயல்படுகிறது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை சந்தை நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் இந்த சந்தைக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். சாதாரண நாட்களில் ரூபாய் நான்கு கோடிக்கு வர்த்தகம் நடைபெறும்.
சந்தையன்று ரூபாய் எட்டு கோடி முதல் 10 கோடி வரை விற்பனை நடைபெறும். பண்டிகை காலத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய் பத்து கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும். மற்ற இடங்களை விட இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
மூன்று நிலைகளில் கண்காணிப்பு குழுவினர், ஐந்துக்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வர பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ரூபாய் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை ரொக்கப் பணமாக கையில் கொண்டு வருவது வழக்கம். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் 24ந் தேதி கூடிய ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உள்ளூர் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டும் வந்திருந்தனர். இந்த நாளில் ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
பொதுவாக மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் 50 சதவீதம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெறும் 5 சதவீதம் மட்டுமே நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்பதால் வியாபாரிகள் கவலையோடு உள்ளார்கள். இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் கோடி கோடியாக செலவு செய்வது வாக்காளர்களுக்கு ஆயிரம் ஆயிரமாக பணத்தை கொடுப்பது ஒருபுறம் நிச்சயம் நடந்தே தீரும். அதை அரசு எத்தனை சட்டம் போட்டாலும்; எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் தடுக்கவே முடியாது. ஆனால், உழைப்பின் மூலம் வருமானம் ஈட்டும் இந்த ஜவுளி தொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் எல்லோரது வாழ்வும் அடுத்த ஒரு மாதம் வரை வருமானம் இல்லாத வாழ்வாக மாறிவிட்டது என பரிதவிப்போடு கூறுகிறார்கள் ஜவுளி தொழிலில் ஈடுபடுவோர்.