
வேலூர் அருகேயுள்ள தொரப்பாடியில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வகுப்புகள் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டிற்குச் செல்லாத சில மாணவர்கள் தங்களுக்குப் பிரிவு உபசார விழாவுக்கு அனுமதி தராத தலைமை ஆசிரியரைக் கண்டித்து வகுப்பறையிலிருந்த இரும்பு மேசைகளைச் சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பத்து மாணவர்கள் அடுத்த 10 தினங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாகப் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஆம்பூரில் அரசுப்பள்ளி ஆசிரியரை ஆபாசமாகத் திட்டி மாணவர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த நிலையில், அது தொடர்பாக மூன்று மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறி நடக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.