கன்னியாகுமரியில் மது அருந்த பணம் தாராததால் தொழிலதிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இதுதொடர்பாக மூன்று இளைஞர்கள் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். தொழிலதிபரான சேகர் நேற்று மாலை அவரது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற பொழுது வீட்டு அருகே போதையில் நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து மது குடிப்பதற்கு பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்த கும்பலுக்கு சேகர் பணம் கொடுக்க மறுத்ததால் அவரிடம் தகராறில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கிருந்து வீட்டுக்குச் செல்ல முயன்ற சேகரை துரத்தி வந்து உருட்டுக் கட்டையால் தாக்கினர். அதனைத் தொடர்ந்து கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற அந்த கும்பல் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சேகரின் வீட்டுக்கு சென்று அவர் வீட்டிலிருந்த மகேந்திரா கார், சுற்றுச் சுவர்களில் வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குளச்சல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட இன்பராஜ், அஜித்ராம், ஸ்டாலின், பிரதீப் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள 4 பேரையும் தேடி வருகின்றனர்.