உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா சிலையை எம்.ஜி.ஆர் சிலையோடு சேர்த்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பலயிடங்களில் திறந்துவைக்க அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதனை மாவட்ட திமுக கடுமையாக எதிர்த்தது. இதனால் அனுமதி பெறாமல் கிராமங்களில் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் – ஜெ., சிலைகளை போலிஸார் அப்புறப்படுத்தினர்.
சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை நகரில் மத்திய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் – ஜெ.,வின் 7 அடி உயர சிலைகளை, அனுமதி பெறாமல் வைத்தனர் அதிமுகவினர். அதனை திறக்கவும் தடைப்போட்டனர். இதனால் அந்த சிலைகள் மூடியே வைக்கப்பட்டுயிருந்தன. அதனை ஜெ பிறந்தநாளான பிப்ரவரி 24ந்தேதி அதிரடியாக திறக்க முடிவு செய்தனர் அதிமுகவினர். இதனை அறிந்த போலிஸார் அதனை 23ந்தேதி அகற்ற முடிவு செய்தனர். அதிமுக தெற்கு மா.செ ராஜன் தலைமையிலான அதிமுகவினர் சாலைமறியல் செய்து சிலையை அகற்றாமல் தடுத்த அவர், அதிரடியாக அன்றே திறந்துவைத்தார், போலிஸ் அதிகாரிகள் கண் முன்பே இது நடந்து முடிந்தது. இதுப்பற்றி நமது நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டியிருந்தோம்.
அதேப்போல் கடந்த 26ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் தாலுக்கா தேவிகாபுரத்தில் கர்மவீரர் காமராஜர் சிலை ரகசியமாக காங்கிரஸ் தொண்டர்களால் திறந்துவைக்கப்பட்டது, இதைக்கேட்டு அதிர்ச்சியான போளுர் சாரக மற்றும் சேத்பட் போலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சியாகி, அனுமதியில்லாமல் எப்படி திறக்கலாம் என சிலையை முடியவர்கள், காங்கிரஸாரிடம் சட்டத்தை பாதுகாக்கனும் என அறிவுரை சொன்னதை, ஜெ.வுக்கு ஒரு நியாயம் – காமராஜர்க்கு ஒரு நியாயம். இது சரியா?. என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் போக்கை சாடியிருந்தோம்.
இந்நிலையில், கடந்த 27ந்தேதி நள்ளிரவு 1 மணியளவில் 300க்கும் அதிகமான போலிஸார் திருவண்ணாமலை நகரில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுயிருந்த எம்.ஜி.ஆர் – ஜெ., சிலையை பொக்லைன் இயந்திரத்தை கொண்டு அகற்றினர். இதுப்பற்றி தகவல் தெரிந்து அதிமுகவினர் திரண்டு வந்து தடுத்தனர். தடுக்கவந்த அதிமுகவினரை கைது செய்ய துவங்க பாதிக்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேடிக்கை பார்க்கவந்தோம் எனச்சொல்லி எஸ்கேப்பாகினர். போலிஸ் இரண்டு சிலைகளையும் அகற்றியது. அதோடு அங்கு பாதுகாப்புக்கும் போலிஸ் நிறுத்தப்பட்டது.
அதேப்போல் 27ந்தேதி இரவே ஆரணி நகரில் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் அனுமதியோடு திறக்கப்பட்ட எம்.ஜி.ஆர் – ஜெ., சிலைகளை அகற்ற போலிஸ் முடிவு செய்தது. இதனை அறிந்த அதிமுக தொண்டர்கள் அங்கு திரண்டனர். அமைச்சரோட தொகுதியில வந்து சிலைகளை அகற்றினிங்க அவ்வளவு தான் என எச்சரித்த அதிமுகவினர் சிலர் ஆரணி பேருந்து நிலையம் அருகே கொட்டிவைத்திருந்த செங்கல்களை இரண்டாக உடைத்து சிலைகளை அகற்ற வரும் போலிஸாரை தாக்க ரெடி செய்தனர். போலிஸ் அதிகாரிகள் வந்து சிலைகளை அகற்ற துவங்க அதிமுகவினருக்கும் – போலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரச்சனை செய்த அதிமுகவினரை கைது செய்து வேனில் ஏற்ற துவங்க, கைது என்றதும் முக்கால்வாசி அதிமுக தொண்டர்கள் எஸ்கேப்பாகிவிட்டனர். ஆரணியில் 92 அதிமுகவினர் மட்டும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இரவெல்லாம் திருவண்ணாமலை, ஆரணி நகரத்தில் பதட்டம் நிலவியது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது வரை மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலிடம் முடிவுப்படி ரிமாண்ட் செய்வதா, வழக்கு மட்டும் பதிவு செய்துவிட்டு பெயிலில் விடுவதா என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
- ராஜா