புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தேசிய பறவை மயில்களின் சரணாலயம் உள்ளது.
தேசிய பறவைகளின் சரலாணயத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் விராலிமலையில் இருந்த மயில்கள் இறைதேடியும், பாதுகாப்பு தேடியும் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்கள் முழுவதும் சுற்றுகிறது இதனால் மயில்களுக்கு ஆபத்தும் அதிகமாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் தண்ணீருக்கு வழியில்லை. இதேபோல தான் எங்கும் நிலைமை உள்ளது. கொளுத்தும் கோடை வெயிலில் தண்ணீர் கிடைக்காமல் மயில்கள் வறட்சியால் சாகும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மயில்களுக்கு விஷம் கூட வைக்கப்பட்டுவிடுகிறது. அதே போல வேட்டைக்காரர்கள் மயில்களை வேட்டையாடி அதன் கறியை அதிக விலைக்கும் விற்று வருகின்றனர்.
அப்படித் தான் நேற்று சனிக்கிழமை புதுக்கோட்டை வனத்துறை ரேஞ்சர் சங்கர் மற்றும் அலுவலர்கள் வழக்கம் போல கீரனூர் பகுதியில் சோதனைக்கு சென்ற போது குளத்தூர் தாலுகா ரெங்கம்மாள் சந்திரத்தை சேர்ந்த கமலஹாசன் என்ற வேட்டைக்காரர் இரு மயில்களை வேட்டையாடி இறகுகளை அகற்றி கறிக்கு தயார் செய்துகொண்டிருக்கும் போது வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு வேட்டையாடப்பட்ட மயில்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கமலஹாசனை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறைக்கு அனுப்பி உள்ளனர்.
மயில்கள், குரங்குகள் அவற்றின் வாழ்விடங்களில் வாழும்போது வேட்டையாடப்படுவதும் இல்லை அந்த இனங்களும் அழியவில்லை. ஆனால் அதன் வாழ்விடங்களில் உள்ள மரங்களை அழிப்பதுடன் குளம், குட்டைகள் சீரமைக்கப்படாமல் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் கிடைக்காமலும், இறை கிடைக்காமலும் அவை வெளியிடங்களுக்கு இறைதேட செல்கிறது. அப்படி செல்லும் வழியில் அடிக்கடி வாகனங்களில் சிக்கி பரிதாபமாக இறக்க நேரிடுகிறது. அதனால் விராலிமலை மயில்களின் சரணாலயத்தை மீண்டும் பராமரித்து மயில்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வசதி செய்தாலே சரணாலயமும் பாதுகாக்கப்படுவதுடன் தேசிய பறவைகளை அழிவில் இருந்தும் காப்பாற்றலாம் என்கின்றனர் சமூக ஆர்வர்கள்.