உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதால் 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தினால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது.
வார இறுதி நாட்களில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாக இருக்கும். இதற்காகவே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் 3 மேம்பாலங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலையின் இடது புறம் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை சர்வீஸ் சாலை பகுதியில் மதுரையிலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தும், தனியார் பேருந்து மற்றும் ஒரு மினி லாரி என மூன்று வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியது. இந்த விபத்தால் இரண்டு மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் காயமடைந்த நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை வேளையில் நடந்த இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.