தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் நள்ளிரவில் இருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று தமிழகத்தின் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இருந்தும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சில இடங்களில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் திமுக தொழிற்சங்க தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் அருகே அரசு பேருந்து மீது கல் எறிந்து பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற்காலிக ஓட்டுநர் பணி வழங்காததால் கருகம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஆத்திரமடைந்து பேருந்து கண்ணாடியை உடைத்தது தெரியவந்துள்ளது.