சென்னையில் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகளை பயணிகளுக்கு தெரிவிக்கும் வசதிகள் இன்று துவக்கப்பட்டது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 700-க்கும் அதிகமான வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் பயணம் செய்யும் போது அடுத்த பேருந்து நிறுத்தம் பற்றிய அறிவிப்பு ஒலிபரப்பப்பட உள்ளது.
இத்திட்டத்தை இன்று சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருடன் இணைந்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக 500 பேருந்துகளில் இந்த திட்டத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று 150 பேருந்துகளில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து வர இருக்கும் பேருந்து நிறுத்ததிற்கு 300 மீட்டர் முன்பே ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.