மேற்கு தொடர்ச்சி மலையான சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் காட்டாறுகள் உருவாகி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சத்தியமங்கலத்தையடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் குன்றி, மாக்கம்பாளையம், அரிகியம் உள்ளிட்ட வனப்பகுதி கிராமங்களுக்கு கடம்பூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் வனப்பகுதியில் உள்ள மேடு, பள்ளமான சாலையைக் கடந்துதான் செல்ல வேண்டும். இப்பகுதியில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் இருக்கும்.
இந்த நிலையில் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் கிராமத்திற்குச் சென்ற அரசுப் பேருந்து மாக்கம்பாளையத்திலிருந்து மீண்டும் நேற்றுமாலை கடம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குரும்பூர் என்ற பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் பள்ளத்தில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்தப் பேருந்து சாலையைக் கடக்க முடியாமல் அங்கேயே நின்றது. இதனையடுத்து சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு வெள்ளநீர் சற்று குறைந்ததால் அந்தப் பாலத்தைக் கடந்து பேருந்து கடம்பூர் வந்து சேர்ந்தது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பெரிதும் அச்சத்திற்கும், அவதிக்கும் உள்ளாகினர். மழைக்காலங்களில் இதுபோன்ற பள்ளங்களை கடக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் இந்த பள்ளங்களில் உயர் மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். இதேபோல் அந்தியூர் மலைப் பகுதியிலும் கன மழை பெய்ததால் பர்கூர் வனப்பகுதியில் பல இடங்களில் புதிதாகக் காட்டாறுகள் உருவாகி சாலைகள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.