புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டு மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து நோயாளிகள் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சைக்காக தினசரி ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றர்.
இந்த மருத்துவமனை நகரில் இருந்து 5 கி.மீ. தள்ளி இருப்பதால் நோயாளிகளும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் நகரப் பேருந்துகளில் தான் செல்ல வேண்டும்.
கடந்த மாதம் ஒரு நகரப் பேருந்து கல்லூரிக்குள் திரும்பிய போது நிலைதடுமாறி நுழைவாயில் தூணில் மோதிக் கொண்டு நின்றது. இந்த நிலையில் நேற்று புதன்கிழமை காலை ஒரு நகரப் பேருந்து நிலைதடுமாறி தூணில் மோதிக்கொண்ட விபத்தில் 18 பயணிகள் காயமடைந்தனர். நோயாளிகளை பார்க்க சென்ற பலரும் காயமடைந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று ஒரு நகரப் பேருந்து நுழைவாயில் தூணில் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. பேருந்து கண்ணாடி, நுழைவாயில் தூணில் உள்ள தடுப்புகள் உடைந்துள்ளது. தினசரி விபத்திகள் நடப்பதால் மருத்துவக்கல்லூரி செல்லும் அரசு நகரப் பேருந்துகளில் பயணிகள் செல்ல அச்சப்படுகின்றனர்.
ஏன் இப்படி ஒரே தூணில் மோதும் விபத்து அடிக்கடி நடக்கிறது? அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் பேருந்தை இயக்குகிறார்களா? என்ற நமது கேள்விக்கு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் சொல்லும் ஒரே பதில்..
அனுபவம் மிக்க ஓட்டுநர்கள் தான் அந்த நகரப் பேருந்துகளை ஓட்டுகிறார்கள். ஆனால் அந்த இடத்தில் தரை சரியில்லைஎன்பது தான் விபத்துக்கு காரணம்.. என்றவர்கள் தொடர்ந்து.. மருத்துவக்கல்லூரி நுழைவாயிலில் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக தரையில் வழுவழுப்பான பார்க்கிங் டைல்ஸ் பதித்துள்ளார்கள். நேரான சாலையில் இருந்து மருத்துவக் கல்லூரிக்குள் தஅரசுப் பேருந்துகள் திரும்பும் போது வழுக்கையாக உள்ள டயர் கிரீப் கிடைக்காமல் தாறுமாறாக போகிறது மேலும் கொஞ்சம தண்ணீர் கிடந்தாலும டயர் வழுக்கிக் கொண்டு போய் தூணில் மோதிவிடுகிறது. முதலில் அந்த தரையை மாற்றிவிட்டு தார் சாலை அமைத்தால் தான் விபத்துகளை தடுக்கலாம். இல்லன்னா எத்தனை காலம் அனுபவம் மிக்க ஓட்டுநர்களாலும் விபத்து நேரும்.
எங்களைவிட அவசரமாக வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தான் ரொம்ப அவதிப்புறாங்க. அதனால முதலில் தரையை மாற்ற நடவடிக்கை எடுக்கனும எனாறனர். விபத்துளை தடுக்க அடிக்கடி ஆய்வுக்கு செல்லும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் நடவடிக்கை எடுக்கனும்..
கவனிப்பாரா அமைச்சர்.?
இரா.பகத்சிங்