ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் யூடியூப்பில் சம்பாதிக்கலாம் என்ற முடிவில் அபாயகரமான வீடியோக்களை யூடியூப்பில் பதிவு செய்தால் அதன் மூலம் எளிதாக சம்பாதிக்கலாம் என்று யோசித்த இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், பைக், சிக்கன் போன்றவற்றை வைத்து ரயில் அதன்மீது தாக்கி செல்லும் வீடியோ காட்சிகளை எடுத்து யூடியூப் வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா ஏற்பேடை அடுத்த சென்னூர் கிராமத்தைச் சேர்ந்த ராமி ரெட்டி என்பவர் பிடெக் படித்து விட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற முடிவு செய்த அவர். இதற்கென அவர் சுமார் 43 வீடியோக்களை எடுத்துள்ளார். அதில் பொம்மைகள், சிக்கன், சைக்கிள், செயின், கேஸ் சிலிண்டர்,பைக் என பல்வேறு பொருட்களை ரயில்வே தண்டவாளத்தில் வைத்து ரயில் வரும்போது அதை இடிக்கும் விதமான வீடியோ காட்சிகளை பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தகவலறிந்த ரேணிகுண்டா ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வீடியோவில் பதிவான பைக் எண்ணை ஆதாரமாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது இந்த வீடியோக்களை பதிவு செய்தது ராமி ரெட்டி என தெரியவர அவரை போலீசார் கைது செய்தனர்.