கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தினர் மாட்டுவண்டி மணல் குவாரிகளை உடனடியாக அமைத்துத் தரக் கேட்டும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டுவண்டி தொழிலாளர் சங்க பகுதி தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். சிஐடியூ மாநில துணை தலைவர் கருப்பையன், சிஐடியூ மாவட்ட செயலாளர் பழனிவேல், மாட்டுவண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், சிஐடியூ மாவட்ட துணை தலைவர் சங்கமேஸ்வரன், சிஐடியு மாவட்ட குழு ராஜமாணிக்கம், பொருளாளர் முருகன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, கிளாங்காடு தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் காசிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் கிளியனூரில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைப்பதற்கு 17.8.22-ல் அனுமதி அளித்தும் இன்று வரை கிளியனூரில் மாட்டுவண்டி மணல் குவாரிகள் அமைக்காமல் காலம் கடத்துகின்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக உறுதி கூறியதன் பேரில் மறியல் போராட்டம் ஆர்பாட்டமாக மாற்றப்பட்டது.