திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்கம் செய்து அதில் சர்வீஸ் சாலை அமைக்க தற்போது அரசு முடிவு செய்து, சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகள், வீடுகள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், தொழிற்கூடங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டடங்களை அப்புறப்படுத்தி இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒரு அறிவிப்பாணையை நாளிதழ்கள் மூலமாக வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணையைப் பார்த்த பொதுமக்கள், “கடந்த முறை இந்தச் சாலைகளை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகளையும், மருத்துவமனைகளையும், தொழிற்கூடங்களையும் தற்போது தேசிய நெடுஞ்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது சர்வீஸ் சாலை அமைப்பதற்கு இதேபோன்று பலருடைய தொழில்களிலும், குடியிருப்புகளிலும், மருத்துவமனைகளிலும் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சர்வீஸ் சாலைகளுக்குப் பதிலாக பறக்கும் பாலங்களை அமைத்தால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள். எனவே சர்வீஸ் சாலை பணியை உடனடியாக நிறுத்துங்கள், பறக்கும் பாலத்திற்கான திட்டத்தை வகுத்து எங்களை வாழ விடுங்கள்.” என்று சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று (09.02.2021) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் இந்த 15 கிலோ மீட்டர் தூரத்தை தேசிய நெடுஞ்சாலையாக பிரித்து, பணிகளை செய்திருக்கும் நிலையில், மீதம் இருக்கக் கூடிய அரைவட்ட சுற்றுச்சாலைப் பணிகளும் கிட்டத்தட்ட 75% நிறைவுற்று இருக்கும் நிலையில், இது முடிவுக்கு வந்தால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படாமல் கனரக வாகனங்கள் மிக இலகுவாக செல்லும். எனவே சர்வீஸ் சாலைகளுக்குப் பதிலாக பறக்கும் பாலங்களை அமைத்துத் தாருங்கள் என்று கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்துள்ளனர்.
மேலும் இந்த சர்வீஸ் சாலை அமைப்பதில் அதிக அளவில் வணிகர்கள் தொழில் செய்யக்கூடிய பலர் இதில் பாதிக்கப்படுவதால், அவர்களுடைய கட்டடங்கள் அகற்றப்பட இருப்பதால் வணிகர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட வியாபாரிகளும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.