
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது நாவலூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். அதே ஊரில் வசித்துவருபவர், முருகனின் அண்ணன் சுப்பிரமணியன்(50). தம்பி மனைவியாகிய தனக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கவிதா.
அந்தப் புகாரின்பேரில் மகளிர் காவல் நிலையப் போலீசார், சுப்பிரமணியனை அழைத்து விசாரணை செய்து, அவரை கண்டித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த சுப்பிரமணியனுக்கும் அவர் தம்பி முருகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைக் கண்ட கவிதா தடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது முருகன் மனைவி கவிதாவை சுப்பிரமணி தாக்குவதும் கவிதாவின் மகன் அழுதுகொண்டே நிற்பதும் வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்ட வைரலாகப் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கடந்த 16ஆம் தேதி ஆவினன்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கவிதா. போலீசார் உரிய விசாரணை நடத்தி சுப்பிரமணியனை கைது செய்துள்ளனர். உடன் பிறந்த தம்பி மனைவி என்றும் பாராமல் மதுபோதையில் தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.