திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாயப்பன் நகர் இரண்டாவது தெரு பகுதியில் வசிப்பவர் 42 வயதான ஜெயசுரேஷ். புகைப்படக் கலைஞரான இவர் சிவனார் தெரு பகுதியில் ஸ்டுடியோ வைத்து பணிபுரிந்த நிலையில், இடவசதி தேவை காரணமாக வேறு ஒரு கடை அமைக்க காலை தன்னுடைய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியே சென்று வாடகைக்கு கடை தேடி இருவரும் சென்றுள்ளனர்.
இவரது மனைவி ரம்யா. இவர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் டைப்பிஸ்ட்டாக ஒப்பந்த பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள். நவம்பர் 9 ஆம் தேதி காலை மகன்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வாடகைக்கு கடை தேடி இருவரும் சென்றுள்ளனர்.
மாலை வீட்டுக்கு வந்து வீட்டின் முன்புறக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து பார்த்தபொழுது முகப்பு கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்திருக்கிறது. கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கணவன் மனைவி இருவரும் பதற்றமாகி, வீட்டுக்குள் நுழைந்து உள்ளே பார்த்ததில் பொருட்கள் கீழே சிதைந்து காணப்பட்டது, அறையில் இருந்த பீரோவின் கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகை மற்றும் சீட்டு கட்டி எடுத்து வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியாகி கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.
அக்கம்பக்க வீட்டினர் அங்கே குவிந்துவிட்டனர். உடனே கந்திலி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். சில வாரங்கள் அடங்கியிருந்த கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கியிருப்பது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.