மாமல்லபுரம் - புதுச்சேரி இ.சி.ஆர் சாலை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படுகிறது. அதற்கான அறிவிப்பாணையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்டது.
சாலைக்காக கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களுக்கு, இழப்பீடு வழங்க டி.ஆர்.ஓ தலைமையில் தாசில்தார்கள் கொண்ட அலுவலகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. நில உரிமையாளர்கள் அந்த அலுவலகத்தில் ஆஜராகி, தாசில்தார்களிடம் அவர்கள் கேட்கும் ஆவணங்களை கொடுத்து, இழப்பீடு தொகையை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை, இழப்பீடு தொகையை பெற அலுவலகம் வந்த கெங்கதேவன் குப்பத்தைச் சேர்ந்த அங்கம்மாள் என்பவருக்கு இழப்பீடு தராமல் லஞ்சம் கேட்டதாக தாசில்தார் மனோகர் மீது அவர் குற்றஞ்சாட்டி கூச்சலிட்டார். இதனால், அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கம்மாள், தாசில்தார் தன்னை அவமரியாதையாக பேசியதாகவும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள், பரமன்கோணி, முதலியார் குப்பம், வேம்பனூர், கடுக்கலூர், கோட்டைக்காடு போன்ற பகுதி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் தாசில்தார் மனோகர், பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றனர்.
மேலும், ஆவணங்களை சரிபார்த்து, இழப்பீடு வழங்க வேண்டும் என்றால், இழப்பீட்டு தொகை 3 லட்சம் வரை இருந்தால் ரூ. 30 ஆயிரம் என்றும், கோடிகளில் இருந்தால் ரூ.10 லட்சம் வரையிலும் லஞ்சமாக வாங்கி வருகிறார் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதிக இழப்பீடு உள்ள நில உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, லஞ்சம் வாங்கி கொண்டு, அலுவலகத்தில் இல்லாமல், வீட்டில் வைத்து வேலையை முடித்து கொடுத்து வருவதாக பேச்சுகள் எழுகின்றன.
இந்நிலையில், அங்கம்மாள் வைத்த குற்றச்சாட்டு குறித்து தாசில்தார் மனோகரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், “நான் லஞ்சம் எதுவும் கேட்கவில்லை. அங்கம்மாள் என்பவர் கொண்டுவந்த நில பத்திரத்தில் பட்டுநாயக்கர் என்பவர் பெயரில் பட்டா இருக்கிறது. ஆகையால் வி.ஏ.ஓ.விடம் சான்றிதழ் வாங்கி வரச் சொன்னேன். அதற்கு அவர் அப்படி கூச்சலிட்டுள்ளார்” என்றார்.