விருதுநகரில் நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் வாங்கியதாக விஏஓ மற்றும் உடந்தையாக இருந்த நபர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் உள்ள நிலத்தை அளக்க வேண்டும் என நக்கீரன் என்பவர் தி. கடம்பன்குளம் விஏஓ செல்வராஜை நாடியுள்ளார். ஆனால் நிலத்தை அளந்து கொடுக்க விஏஓ செல்வராஜ் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நக்கீரன் புகார் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் நக்கீரனிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், லுங்கி, வேட்டி உள்ளிட்ட சாதாரண உடைகளில் ஆங்காங்கே பொதுமக்கள் நிற்பதுபோல மறைந்திருந்து நோட்டமிட்டனர். அப்பொழுது 25 ரூபாய் லஞ்சம் வாங்கும் முயன்ற விஏஓ செல்வராஜை கையும் களவுமாக பிடித்தனர். அதேபோல் லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த மோகன் தாஸ் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.