லாரி கடத்தல் வழக்கில் லஞ்சம் வாங்கிய 6 காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. லாரி தொழில் செய்து வரும் முரளி கடந்த 2015 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் தனது லாரியை கடத்தி வந்து விற்பனை செய்ததாக காவல்துறையில் புகாரளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை தேடி வந்தனர். தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல்நிலைய போலீசார் இந்த லாரி திருட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் காமராஜ், சப் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் லாரியை திருடியது தெரியவந்தது. ராஜசேகரிடம் லாரியை ஒப்படைக்குமாறு கூறிய நிலையில், தான் லாரியை உடைத்து விற்று விட்டதாக ராஜசேகர் தெரிவித்தார். லாரியை கொடுக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இல்லையெனில் லாரிக்கான 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் 2015 ஆம் ஆண்டு ஏழு லட்சம் ரூபாய் முதல் தொகையை ராஜசேகர் கொடுத்துள்ளார். தொடர்ந்து மீதி பணத்தையும் கொடுக்குமாறு இன்ஸ்பெக்டர் காமராஜ், சப் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜசேகர் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது கணக்கில் வராத 7 லட்சம் ரூபாய் இருந்தது. 7 லட்சத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் போலீசார் ஏன் காவல் நிலையத்திலேயே வைத்திருந்தனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். போலீசார் சார்பில் முறையான பதில் சொல்லப்படாததால் இருவர் மீதும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில், தற்போது தமிழக காவல்துறை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கு சம்பந்தமாக அப்போது பணியிலிருந்த குற்றப்பிரிவு தலைமைக் காவலர் கார்த்திக், அறிவுச்செல்வம், நாசர், ரகுராம் ஆகிய நான்கு பேருக்கும் தொடர்புள்ளது. எனவே காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் குற்றப்பிரிவு தலைமைக் காவலர் நாசர், ரகுராம் உள்ளிட்ட ஆறு பேரும் நிரந்தர பணி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.