திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில் உள்ளது குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில். இந்தக் கோவிலுக்கு பிச்சுமணி என்பவர் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்தக் கோவிலுக்கான திருப்பணி வேலைகள் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளதால். மீண்டும் தற்போது திருப்பணிகளை மேற்கொள்ளவும், அதனை உபயதாரர்கள் மூலமாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திருப்பணியை மேற்கொள்ள இந்து அறநிலையத் துறையில் முறையான அனுமதியை பெற்றுள்ளனர். ஆனால், இந்தக் கோவிலில் திருப்பணி மேற்கொள்ள தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மாநில அளவிலான நிபுணர் குழு கமிட்டியில் ஆய்வறிக்கை பெறவேண்டிய நிலை இருந்துள்ளது. இதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் அந்த கமிட்டியில் முறையிடப்பட்டுள்ளது. அதனை ஏற்ற கமிட்டியினர் கடந்த 2.6.2022 அன்று பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் ஆய்வு செய்துள்ளனர். ஆனால், அந்த ஆய்வறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப் பெறாததால் நிர்வாகத்தினர், கமிட்டியினரை தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது கமிட்டியின் உறுப்பினரும் தொல்லியல் துறை வல்லுநருமான மூர்த்தீஸ்வரி என்பவர், கடந்த 12.10.2022 அன்று மீண்டும் கோவிலுக்கு வந்து பிச்சுமணியை சந்தித்து ரூ. 10 லட்சம் பணம் கொடுத்தால் கமிட்டியிலிருந்து ஆய்வறிக்கை வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பிச்சுமணி, பத்து லட்ச ரூபாய் அதிகமாக உள்ளதாகவும் இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அதற்கு மூர்த்தீஸ்வரி, ஐந்து லட்ச ரூபாய் குறைத்துக்கொண்டு, ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால்தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறும் பிச்சுமணியிடம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த ஆலோசனையின் பேரில் பிச்சுமணி, மூர்த்தீஸ்வரியிடம் ஒரு லட்ச ரூபாய் முன்பணத்தை கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோவில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோவில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் மூர்த்தீஸ்வரியின் காரை சோதனை செய்தபோது, அவரது காரில் கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது.