முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து மாநிலம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த ஆய்வில் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 56 பேரை பணியில் இருந்து விடுவித்து அமைச்சர் சக்கரபாணி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலையில், நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (டிஎன்சிஎஸ்சி) நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல்லை பெற கட்டாயம் லஞ்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், விவசாயிகளின் நலனை காக்கும் வகையில், நெல் கொள்முதலில் எந்தவித தவறும் நடைபெறக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினால் அரசு பொறுத்து கொள்ளாது, தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், நெல் கொள்முதல் தொடர்பாக புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் அறிவித்தார்.
இந்த நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மேற்பார்வையாளர்களை நியமனம் செய்து அமைச்சர் உத்தரவிட்டார். தொடர்ந்து, அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்தனர். தொடந்து அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகளும் நடத்திய ஆய்வில், விவசாயிகளிடம் மட்டும் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் செஞ்சி அருகே நல்லான்பிள்ளை பெற்றால் கிராமத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கட்டணம் பெற்ற புகாரையடுத்து அங்கு பணியாற்றிய எழுத்தர், பணி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோன்ற செஞ்சி அருகே உள்ள கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்டதாக மேற்பார்வையாளர் துரைமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுராந்தம் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் புகார்கள் மீது பலர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தஞ்சை மண்டலத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தில் புகாரின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணியில் சேராதவர்களை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 30 எழுத்தர்கள், 26 உதவுபவர்கள் என மொத்தம் 56 பணியாளர்களை பணியில் இருந்து விடுவித்து அமைச்சர் சக்கரபாணி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தரமான பெருட்களை வழங்குவதை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் பொதுமக்களுக்கு தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த ரேசன் கடை விற்பனையாளர்கள், செயலர்கள் என மொத்தம் 27 பேர் பணியடை நீக்கம் செய்யபட்டிருக்கிறார்கள். மேலும் விவசாயிகளடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் இடத்தில் முறைகேடில் ஈடுபட்டதாக இரண்டு பேர் மீது லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு பதிவு செய்துள்ளது. இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.