குரூப்-1 தேர்வில் முறைகேடுகள் தொடர்ந்துகொண்டே இருப்பதால் கஷ்டப்பட்டும் படிக்கும் மற்றும் பணவசதி இல்லாத, ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் தமிழக அரசின் துணைக் கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட உயர்பதவிகளை பிடிக்கமுடியவில்லை. இதனால், லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபடும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளைக் கண்டித்து தனியார் பயிற்சிமைய இயக்குனர்களும் மாணவர்களும் வள்ளுவர் கோட்டத்தில் 2019 ஜூலை- 4 ந்தேதி வியாழக்கிழமையன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது போராட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள்.
இது குறித்து, போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ள தமிழ்நாடு போட்டி தேர்வுகள் பயிற்சி நிறுவன கூட்டமைப்பு (அசோசியேஷன் ஆஃப் ஐ.ஏ.எஸ். அகடமிஸ் இன் தமிழ்நாடு) அமைப்பினர் நம்மிடம், “கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்வில் 24 வினாக்கள் தவறுதலாக கேட்கப்பட்டுள்ளன என்று டி.என்.பி.எஸ்.சி நிர்வாகமே உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. பொதுவாக, பல ஆண்டுகளாகவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் குறிப்பாக குருப் 1 தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் உள்ளது.
இதனால், உடலை வருத்தி கஷ்டப்பட்டு படிக்கும் தேர்வர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், சமீப காலமாக டி.என்.பி.எஸ்.சி அமைப்பினால் நடத்தப்படக்கூடிய குருப் 1 உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளிலும் ஒரு வினா கூட தவறாக இல்லாமல் இல்லை. இதனால், அரசு வேலையை நம்பி படிக்கும் தேர்வர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
எனவே, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை வேண்டியும், தேர்வர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டியும், டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள போட்டி தேர்வு பயிற்சி மைய இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தேர்வர்களை ஒருங்கிணைத்து அமைதியான அறவழியில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து, முறைப்படி காவல் துறையிடம் அனுமதியும் பெற்றுள்ளோம்.
மேலும், சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்விலும் 26 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டன. அப்போது, தேர்வர்கள் நடத்திய அமைதி அறவழிப்போராட்டத்தினால், தற்போது நடைபெற இருக்கும் மெயின் தேர்வினை அம்மாநில தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வினை ரத்து செய்தல், மற்றும் அனைத்து தேர்வுகளிலும் வெளிப்படைத்தன்மை வேண்டி நடைபெற இருக்கும் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர நம் அமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம். எந்த காரணம் கொண்டும், அமைதி போராட்டத்தில் தனி நபர் தாக்குதல், தனி நபருக்கு எதிராக பேசுதல் கூடாது என்ற காவல் துறையின் அறிவுரையை அனைவரும் கடைபிடிக்க வேண்டுகிறோம்” என்றார்கள். அமைப்பின் தொடர்பு எண்கள்: 9840398093, 9443019087, 9791885670, 7550151584
நிர்வாக சீர்திருத்தத்துறை மானியக்கோரிக்கை வரும் சூழலில் இப்படியொரு போராட்டம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.