சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அருள் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் அருள்மொழிசெல்வன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் அருள் மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர்கள் மருத்துவர்கள் பிருந்தா, பத்மினி மற்றும் பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு இளம் வயது பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் அதனைச் சரி செய்வது, மார்பக புற்றுநோய் வந்தால் உடலில் என்ன அறிகுறிகள் ஏற்படும். மார்பக சுய பரிசோதனை செய்வது எப்படி, இதனை ஆரம்பக் கட்டத்திலேயே எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை விளக்கிக் கூறினார்கள்.
இந்த மருத்துவ முகாமில் 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் ஆசிரியை அல்லாதவர்கள் கலந்து கொண்டு, பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு மருத்துவர் பவித்ரா ஆலோசனைகளை வழங்கினார். மேலும், ஆசிரியைகள் பள்ளி வகுப்பறையில் இளம் வயது பருவ மாணவிகளிடம் இதுகுறித்து விளக்கிக் கூறினால், இளம் வயதிலேயே பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தடுப்பது மிகவும் எளிதாக இருக்கும் என அறிவுறுத்தினார்.