தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வி.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவைத் தீக்கரையாக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மாணவி உயிரிழந்தது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பான கைதும், ஒருபுறம் தொடர்கிறது. மற்றொரு புறம், அமைச்சர்கள், மாணவியின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தொலைபேசி வாயிலாக மாணவியின் தாயாரிடம் பேசிய முதலமைச்சர், அவருக்கு ஆறுதல் கூறியதுடன், மாணவி உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், மாணவியின் தாயார் தனது மகளுக்கு நீதி கேட்டு நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக நேற்று (23/08/2022) அறிவித்திருந்தார். இதையறிந்த காவல்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இந்த தகவல் அமைச்சர்களுக்கு செல்ல, உடனடியாக மாணவியின் தாயாரைத் தொடர்பு கொண்ட அவர்கள், வரும் சனிக்கிழமை அன்று நீங்கள் முதலமைச்சரைச் சந்திக்கலாம். சந்திப்புக்கு முதலமைச்சர் இசைவு தெரிவித்துள்ளார் என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து, வரும் சனிக்கிழமை அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஸ்ரீமதியின் தாயார் செல்வி நேரில் சந்திக்கவுள்ளார்.