சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (9.1.2024) சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், சு. முத்துசாமி, பி. கீதா ஜீவன், பி.கே. சேகர்பாபு, செஞ்சி கே.எஸ். மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அரசு சாரா நிறுவனங்களுக்கான மானியத் தொகையை எந்தவித தங்குதடையுமின்றி, விரைந்து வழங்குவதற்கு ஏதுவாக, உரிய இணைய வழி முகப்பு உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இல்லங்கள் மற்றும் விடுதிகளுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் குறித்து தேவையான அனைத்துச் சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்கள் வழங்கப்பட்டவுடன் குறுகிய காலத்திற்குள் உரிமம் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் வழங்கப்படும் அரிசி போன்றவை இல்லங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கப்பெறுவது தொடர்பாக மாநில அளவில் உள்ள துறைகளின் மூலம் இதற்கான விநியோக அனுமதி மற்றும் குறைதீர்வு வழிமுறைகள் வழங்கப்படாமல் மாவட்ட ஆட்சியரின் மூலமே இதற்கான முன்னெடுப்புகள் நடைமுறைப்படுத்தப்படும்.
அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வானவில் மன்றம், தேன் சிட்டு மலர், கலைத்திருவிழா போன்ற திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்துவது குறித்து சாதகமாகப் பரிசீலிக்கப்படும். அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதிநிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும். கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்வது குறித்து வரும் நிதி நிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும்.
அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாளர் நிர்ணயம், பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல், பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த கோரிக்கைகளுக்கென தனியாக ஒரு இணையதள வசதி ஏற்படுத்தப்படும். பள்ளிக் கல்வித் துறையில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை பொதுப்பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வயது வரம்பு அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
சிறுபான்மையினரின் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில், யு.ஜி.சி. மற்றும் அரசு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம் மற்றும் அரசால் மூன்று மாத காலத்திற்குள் நியமன அங்கீகாரம் அளிக்கப்படும். மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும். சமூகநலத் துறை, ஆதி திராவிடர் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகளின் கீழ் உதவி பெறும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்தல், உரிமங்களைப் புதுப்பித்தல், நிதியுதவி மற்றும் மானியங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் ஆகியவை எளிமைப்படுத்தப்படும். இதற்கென பிரத்யேகமாக ஒரு இணையதளம் உருவாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.