கொடைக்கானலில் விதிமீறிய கட்டிடங்கள் இடிக்கப்படும்! கமிசனர் நடவடிக்கை!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் வீடுகளோ வர்த்தக ரீதியான கடைகளோ, லாட்ஜ்களோ கட்டக்கூடாது என விதிமுறைகள் இருந்து வருகிறது. ஆனால் அந்த விதிமுறைகளை மீறி கோடை நகரில் உள்ள அண்ணாசாலை, மூஞ்சிக்கல், லேக் பகுதி நாயுடுபுரம் மற்றும் பில்டிங் சொசைட்டி உட்பட பல பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி நகராட்சி அனுமதி பெறாமல் வர்த்தக ரீதியாக கட்டி பயன்படுத்தி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சியில் குடியிருப்பு என அனுமதி வாங்கிக்கொண்டு வர்த்தக ரீதியான வியாபார ஸ்தலங்களாக பயன்படுத்தி வருவதால் கோடை நகராட்சிக்கும் வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நகராட்சி கமிசனர் சரவணன் மற்றும் நகர அமைப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகள் குழு நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து, அதில் 47 கட்டிடங்கள் வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருவது கண்டு பிடிக்கப்பட்டு நோட்டீசும் அனுப்பியுள்ளனர்.
அதோடு விதிமுறைகளை மீறி மூன்று மாடிகளாக கட்டப்பட்டு வந்த 10க்கும் மேற்பட்ட கட்டிடங்களை கண்டுபிடித்ததின் பேரில் அதை இடிக்கவும் சம்மந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கும் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது சம்மந்தமாக நகராட்சி கமிசனர் சரவணனிடம் கேட்டபோது... நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்போர் பலர் அனுமதி வாங்கிக்கொண்டு வீடுகளுக்கு அனுமதி வாங்கிவிட்டு வர்த்தக ரீதியான கட்டிடங்களை கட்டி சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வருகிறார்கள். இதனால் நகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால் அப்படிப்பட்ட கட்டிடங்களை கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்பி வருகிறோம். அதன்பின் முறையான அனுமதி வாங்கவில்லை என்றால் இந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் விதிமுறைகளை மீறி மூன்று மாடியும், அதற்கு மேலும் கட்டிய பல கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். அதன்மூலம் அந்த கட்டிடங்களை சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் இடிக்க வேண்டும். இல்லையென்றால் நகராட்சி நிர்வாகமே இடிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்று கூறினார். இதனால் நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிட உரிமையாளர்கள் பெரும் பீதியில் இருந்து வருகிறார்கள்!
-சக்தி