கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எ.ஏ. செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது சிவகுமார், சூர்யா, ஜோதிகா சிம்பு, இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். அண்மையில் ரஜினி படத்தை பார்த்து கமலிடம் தொலைப்பேசியிலும் சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்தும் பாராட்டி இருந்தார்.
இதனிடையே காஷ்மீர் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமரன் படத்தில் காட்சிகள் உள்ளதாக எஸ்டிபிஐ கட்சியினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்படம் குறித்து தனது பார்வையை முன்வைத்துள்ளார் இயக்குநர் கோபி நயினார். அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், “சமீபத்தில் நான் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியும் அதனால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரிய வருகிறது. அதனால் இந்த படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது. ஆனால் இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
இப்படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள். இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார், அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர். ஆனால் அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது. நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு” எனக் குறிப்பிட்டுள்ளார். இதே போல் இயக்குநர் வசந்த பாலனும் படத்தை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.