விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தேவேந்திரன் என்பவர், அப்பகுதியில் உள்ள அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது சிறுவன் தேவேந்திரன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அச்சமயம் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே சமயம் போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.
மேலும் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவன் தேவேந்திரன் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.