Skip to main content

தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியலால் போலீஸ் குவிப்பு!

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

கதச

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நார்த்தாமலை பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சில நாட்களுக்கு முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், மற்றும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ளும் மத்திய மண்டல போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போது கொத்தமங்கலம் பட்டியை சேர்ந்த புகழேந்தி என்ற சிறுவன் தனது தாத்தா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவனது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மூளை வரை துளைத்து சென்றது.

 

gjh

 

ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு 4 மணி நேரம் போராடி மூளையிலிருந்த துப்பாக்கி குண்டு மற்றும் மண்டை ஓட்டின் துண்டுகளை மருத்துவ குழுவினர் அகற்றினார்கள். அதன் பிறகும் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆபத்தான நிலையிலேயே இருந்த சிறுவன் புகழேந்தி இன்று மாலை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

dfg

 

இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியான நிலையில் சிறுவனின் சொந்த ஊரான கொத்தமங்கலப்பட்டி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல நார்த்தாமலை பொதுமக்கள் திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. தகவலறிந்து கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்ளிட்டோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். 

 

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். துப்பாக்கி சுடும் பயிற்சிமையத்தை நிரந்தரமாக மூட வேண்டும்.  சிறுவன் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த துப்பாக்கி சுட்ட வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்ததோடு இல்லாமல் இதனை கொலை வழக்காக பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இந்த கோரிக்கை ஏற்கப்படும் வரை சிறுவனது சடலம் வாங்கப்படமாட்டாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்