தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மாலை நேரத்தில் பொதிகை விரைவு ரயில் இயக்கப்படும் நிலையில் நேற்று கடையநல்லூர் வழியாக ரயில் சென்று கொண்டிருந்த பொழுது ரயில் தண்டவாளத்தின் மீது 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டது தெரியவந்தது. செங்கோட்டையிலிருந்து கிளம்பி கடையநல்லூர் வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த பொழுது ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியே இருக்கக்கூடிய போகநல்லூர் என்ற கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ சில மர்ம நபர்கள் 10 கிலோ எடை கொண்ட பாறாங்கல்லை வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பின்பு அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அந்த கல்லை அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்பு இதேபகுதியில் பொதிகை ரயில் வரும் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்ட சம்பவம் நடந்த நிலையில் அது தொடர்பாக வடமாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் நேற்று தீபாவளி நாளான நேற்று ரயில் வரும் பாதையில் கல் வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என்ற கோணத்தில் மீண்டும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.