கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன்(65). இவரது மனைவி செல்லம்மாள்(59). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் கோவிந்தராஜ் சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தபோது நயினார் பாளையம் அருகே உள்ள ஈரியூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய கோவிந்தராஜ், செல்வத்துடன் சேர்ந்து கூட்டாக 2020 ஆம் ஆண்டு 17 லட்சத்திற்கு நெல் அறுவடை எந்திரம் வாங்கி தொழில் செய்து வந்துள்ளனர். நெல் அறுவடை இயந்திரத்திற்கான மொத்த பணம் 17 லட்சம் ரூபாயில் செல்வம் 8, 1/2 லட்சம் ரூபாயும், கோவிந்தராஜ் 8 1/2 ரூபாயும் கடனை பாதி பாதியாகப் பிரித்துக் கொண்டனர். இந்நிலையில் செல்வத்திடம் இருந்த நெல் அறுவடை எந்திரத்தை கோவிந்தராஜ் மேலூரில் உள்ள தனது வீட்டிற்குக் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது
இது குறித்து செல்வம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் நெல் அறுவடை எந்திரத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் நேற்று மேலூர் சென்று கோவிந்தராஜ் மற்றும் அவரது தந்தை ரங்கன், தாயார் செல்லம்மாள் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அதன்பிறகு செல்வம் மீது கோவிந்தராஜ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனு மீதும் இரு தரப்பினரையும் அழைத்து இன்று விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ரங்கன் அவரது மனைவி செல்லம்மாள் ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரது உடலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவரும் மகன் வாங்கிய கடனுக்காக போலீஸ் விசாரணை வரை சென்றதால் அதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.