கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு கரோனா தடுப்பூசிகளும் பாதுகாப்பானவைதான் என்றும், இரண்டில் எது கிடைத்தாலும் மக்கள் போட்டுக்கொள்ளலாம் என்றும் தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துவருவதை அடுத்து, நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜூன் 5) நேரில் ஆய்வு செய்தார்.
கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, சிகிச்சை நடைமுறைகள், ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம், அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் ஊடகத்தினரிடம் கூறியதாவது:
“தமிழகத்தில் கிராமங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒருபுறம் காய்ச்சல் முகாம் நடத்தி, அறிகுறி உள்ளவர்களுக்குப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். மறுபுறம், கூடுதல் படுக்கை எண்ணிக்கை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு உத்தரவால் பல்வேறு மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக, 17 மாவட்டங்களில் கணிசமாக தாக்கம் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தொற்றின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் 835 ஆக இருந்த ஆக்சிஜன் படுக்கை வசதி, 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரும்பாலை வளாகத்தில் 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் படுக்கை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒருவருக்கு கரோனா தொற்று இருந்து, அவர் உரிய சிகிச்சை பெறாமல் தொடர்ந்து 5 நாட்கள்வரை அலட்சியமாக இருந்தால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அச்சமின்றி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
நோய்த் தொற்று தாக்கம் குறைந்தாலும், முகக்கவசம் தொடர்ந்து அணிய வேண்டும். நிகழ்ச்சிகளில் கூட்டமாக கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு நாளைய ஆக்சிஜன் உற்பத்தி 400 மெட்ரிக் டன்னாக உள்ளது. இதில் 280 மெட்ரிக் டன் வரை பயன்பாடு இருந்தது. மே முதல் வாரத்தில் ஆக்சிஜன் தேவையானது 500 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. இதற்காக பிற மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜன் பெறப்பட்டது.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களிலும் தர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அப்போது மிகக் குறைந்த அளவு பாசிட்டிவ் அல்லது அதிக எண்ணிக்கையில் பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தால், தற்காலிகமாக பரிசோதனையை நிறுத்த உத்தரவிடப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். பணம் சம்பாதிக்க இது நேரமல்ல. காப்பீட்டு திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகள் செலுத்திய தொகையை திரும்பப் பெற்றுத் தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு இதுவரை 1.01 கோடி டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. இவற்றில் 95.91 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்குப் போடப்பட்டுள்ளன. தற்போது 1.50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நடப்பு மாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 42 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் ஓரிரு நாளில் வந்து சேர்ந்துவிடும்.
இது மட்டுமின்றி, அவசரத் தேவையாக 80 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வந்து சேர்ந்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. நோய் எதிர்ப்புத்திறன் உள்ளவை. எனவே, எந்த தடுப்பூசி கிடைக்கிறதோ அதனை மக்கள் போட்டுக்கொள்ள வேண்டும்.
கரோனா 3வது அலையை எதிர்கொள்ள, 13 பேர் கொண்ட தனிக்குழுவை முதல்வர் நியமித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 843 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா இல்லாதவர்களுக்கும் கருப்பு பூஞ்சை நோய் வருகிறது. தற்போது இதுகுறித்தும் மக்களுக்கு வெகுவாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆய்வின்போது அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால், பொது மருத்துவத்துறைத் தலைவர் சுரேஷ் கண்ணா, சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குநர் மலர்விழி வள்ளல், துணை இயக்குநர் செல்வகுமார், மாநகர நல அலுவலர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.