ஆதார் அட்டையில் பிறந்த வருடம் பிழையாக இருப்பதால் பல வருடங்களாக அதை மாற்ற முடியாமல் திருச்சியை சேர்ந்த பெண் தவித்து வருகிறார்.
திருச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த கவிதா என்ற பெண் வைத்த கோரிக்கை தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவியின் பெயர் கவிதா. 41 வயதான கவிதா 1982ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு ஆதார் அட்டை கொடுக்கும் பொழுது அதில் பிறந்த வருடம் 1900 என அச்சிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இதை மாற்றக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கவிதா அளித்த மனுவில், “எனது வாக்காளர் அடையாள அட்டையில் 3.5.1982 என எனது பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ரேஷன் கார்டில் 41 வயது என்று உள்ளது. ஆனால் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் 1900 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டையின் படி எனக்கு 123 வயது. தற்போது ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்து ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதிலும் எனது வயது மாறுகிறது. ஆதார் அட்டையில் வயதை மாற்றக் கோரி 4 ஆண்டுகளாக அலைந்து வருகிறேன். ஆனால் மாற்ற முடியவில்லை. இதனால் பல இன்னல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். எந்த ஒரு நலத் திட்டமோ, வங்கியில் கடனுதவியோ எதுவும் வாங்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. எனவே, எனது வயதை மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் எதுவும் பெற முடியாததால் பல சிக்கல்களை கவிதா அனுபவித்து வருவதாகவும் பிழையைத் திருத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.