தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மூத்த தலைவரும், தேசிய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க தலைவருமான நாவலாசிரியர் எழுத்தாளர் பொன்னீலனுக்கு பபாசி அமைப்பு கலைஞர் விருது கொடுக்கிறது.
2020 -ஆம் ஆண்டிற்கான டாக்டர் கலைஞர் பொற்கிழி மற்றும் விருதிற்கு தேர்வானவர்களின் பட்டியலை பபாசி அறிவித்துள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) கடந்த 43 ஆண்டுகளாக சென்னை புத்தகக் காட்சியை நடத்தி வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய புத்தகக் காட்சிகளுக்குள் ஒன்றாக சென்னை புத்தகக் காட்சியை மாற்றியது பபாசி அமைப்பு . இந்நிலையில் சென்ற 2007ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி அன்று சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள தூய ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 30-வது சென்னை புத்தகக் காட்சியை மறைந்த அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். மேலும் அந்நிகழ்வில், கலைஞரின் சொந்தப் பணமான ரூபாய் ஒரு கோடியை பபாசி அமைப்பிடம் வழங்கி, அறக்கட்டளை ஒன்றை அமைத்து இந்த ஒரு கோடி ரூபாயை மூலதனமாக இருப்பு வைத்து, இந்த தொகையிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாயின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி மற்றும் விருது வழங்கி அவர்களை கௌரவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் விருப்பப்படி கடந்த 2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கலைஞர் பொற்கிழி மற்றும் விருது பபாசி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரையிலும் மொத்தம் 82 எழுத்தாளர்களுக்கு ரூ. 82 லட்சம் பொற்கிழிகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள சிறந்த அறிஞர்கள் அடங்கிய தேர்வுக்குழுவின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி கடந்த மார்ச் 10, 2020 அன்று ஒன்று கூடிய தேர்வுக்குழுவினர் கீழ்க்கண்ட எழுத்தாளர்களை இந்த ஆண்டுக்கான விருதிற்கு தேர்வு செய்தனர்.
2020ம் ஆண்டிற்கான கலைஞர் பொற்கிழி மற்றும் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரத்தை பபாசி அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,
1) ந.முருகேச பாண்டியன்
உரைநடை
2) அ.மங்கை
நாடகம்
3)அறிவுமதி
கவிதை
4) பொன்னீலன்
நாவல்
5) சித்தலிங்கையா
பிற இந்திய மொழி எழுத்தாளர் - கன்னடம்
6) ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப..
ஆங்கிலம்
இவர்களுக்கு இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா, உலக புத்தக தினமான ஏப்ரல் 23, 2020 அன்று சென்னையில் நடைபெறுகிறது. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள் என பல்துறை அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு பபாசி அமைப்பு அறிவித்துள்ளது.