டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், இன்று (06-11-2020) ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே, தமிழக அரசைக் கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டியு டாஸ்மாக் தொழிற்சங்கச் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யு பாரதி, பாட்டாளி மக்கள் கட்சி டாஸ்மாக் சங்கச் செயலாளர் ஆறுமுகம், ஏ.ஐ.டி.யூ.சி சின்னசாமி, கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள், டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் 20 சதவீத போனஸை அரசு வழங்க வேண்டும். கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைப் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றியமைத்து அரசு உத்திரவிட்டுள்ளது. இது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கடையின் நேரத்தை முன்புபோல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும்.
டாஸ்மாக் கடையில் 17 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி வரன் முறை, கால முறை ஊதியம், வார விடுமுறை மற்றும் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை, தேசிய, மாநில அளவிலான பண்டிகைக் கால விடுமுறைகள் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு சட்டப்படியான உரிமைகளை வழங்கிட வேண்டும். பிற துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கு வழங்குவது போல் கரோனா வைரஸ் தொற்றால், உயிரிழக்க நேரிட்டால் ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும். பணியின்போது மரணமடையும் ஊழியரின் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது சேரவேண்டிய சட்டப்படியான ஓய்வு கால பணப் பலன்களைக் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.